Monday, January 1, 2024

லேசா லேசா...மலர் செல்வம்





காலை சமையல் வேலைகள் முடிந்ததும் ஒரு கப் சூடான காஃபியுடன் பால்கனி ஊஞ்சலில் உட்காந்தேன்..

நேற்று சாயங்காலத்திலிருந்து ஒரு சின்னக் கோபம்  மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது .நேற்று சின்னது. இன்று அசுர வேகத்தில் வளர்ந்து வளர்ந்து  தலைவலியாக உரு மாற்றம் அடைந்திருந்தது.அடுத்து மைக்ரேன் தான் என்று தோன்றியது.

"எப்படி ஒருவரால் இப்படி  பேச முடியும்?".  கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்ப அதே கேள்வி மனதில்.அப்ப இவ்வளவு நாள் நான் செய்ததெல்லாம்? அடுக்கடுக்காகக் கேள்விகள் அணிவகுத்தன.மனம் சோர்வை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருந்தது.

சமையலில் மனம் ஒன்றாமல் குக்கரிடம்  வாங்கியிருந்த சூடு வேறு எரிந்தது..எத்தனை வருஷம் சமையல் அனுபவம் இருந்தாலும் தியானம் போல ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அலைபாய்ந்தால் சுடச்சுட   இப்படிக் கை மேல்,பலன் உறுதி. 

அட்டகாசமான ஃபில்டர் காபியோ கீழே   பள்ளிப் பேருந்துகளைக் கண்டதும் உள்ளே பாய்ந்து ஏறிச் சத்தமிடும் குழந்தைகளின் குதூகலமோ  வெயிலுக்கும் குளிருக்கும் இடைப்பட்ட  இதமான காலநிலையோ எதுவுமே  ரசிக்கவில்லை.  இவற்றையெல்லாம் ரசித்தபடி காபியை சுடச்சுட ரசித்து அருந்தும் வழக்கமான மனோநிலை  அடியோடு மாறியிருந்தது. ஆறிய காபியை பார்த்தபடி யோசனை ஒரே  சிந்தனைக்குள்  சிக்கியது. எருமைமாடு தெரிந்தே  சேற்றுத் தண்ணிக்குள் கிடப்பது போல  ஏன் இப்படி? சே...

மொபைல் அழைத்தது. விஜயாம்மா. எங்க குடியிருப்புக்குள் இருக்கும் சிறிய ஆவின் விற்பனையகத்தின் பொறுப்பாளர். பால் பொருட்களுடன் சில நொறுக்ஸ், கீரை,வாழைப் பூ, வாழைத் தண்டு,பூஜைக்கான பூன்னு சிலதும் இருக்கும்.

விஜயாம்மாவுக்கு 60 வயதுக்குள் இருக்கும்.  ஒல்லியான சிவந்த தேகம். மஞ்சள் பூசிக் குளித்த முகத்தில் மிளிரும்   குங்குமப் பொட்டு. எளிய பளிச்சென்ற நூல் சேலை. பார்த்ததும் தொற்றிக் கொள்ளும் சிநேகமான சிரிப்பு . அன்றைய நாளை உற்சாகமாக்கும் பேச்சு.

அல்ஸீமர் நோயால் அலைக்கழிக்கும் கணவர் மற்றும் இன்ன பிற கீழ்நடுத்தரவர்க்கத்துக்குரிய அன்றாடப் பிரச்னைகளுடன் அல்லாடும் ஜீவன்.

'நேற்றே மணத்தக்காளி கீரை வேண்டும் என்று சொல்லியிருந்தேன். வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான துவையல் அது.

கீரையை சுத்தம் செய்து கொஞ்சம் நெய் சேர்த்து நன்கு வதக்கிவிட்டு இன்னொரு வாணலியில் கொஞ்சம்  எண்ணெய் விட்டு ஒரு இருபது சின்ன வெங்காயம், வரமிளகாய்,கொத்தமல்லி,சீரகம், அனைத்தையும் வறுத்து உப்பு,புளி  தேங்காய் சேர்த்து  கெட்டியாக அரைத்தால் துவையல் ரெடி. சுடுசாதத்தில் பிசைந்து ரெண்டு கரண்டி நெய் சேர்த்து  சாப்பிட்டால் அட அட அடடா!

ஊரில் இதற்கு  கருஞ்சுக்குட்டிகீரை என்று பெயர்.  குட்டியாக கருப்பு வைரம் போல மின்னிக் கொண்டிருக்கும் அதன் பழங்களின்  ருசி இன்னும் தொண்டையிலயே இனிக்கிறது. கருப்பு சின்னஞ்சிறியது இரண்டையும் இணைத்து கருஞ்சுக்குட்டி என்று பெயர் வைத்தவரின் ரசனை எப்போதும் வியப்பைத் தரும்.

மொபைலை  உயிர்ப்பித்தேன். "மணத் தக்காளி கீரை வந்திருக்கு. இன்னிக்கு வாழைப்பூ கொண்டாந்திருக்கேன்.வர்றியாம்மா"

வாழைப்பூ பொரியலும் பிடித்தமானது தான். சுத்தம் செய்வதை நினைத்தால்...யம்மாடி!

"வாழைப்பூ இன்னிக்கு  வேண்டாம்"

"கீரை ஆஞ்சுட்டு வாழப்பூ எப்ப ஆயறதுனு வாணாங்கறியா?  நானே சுத்தம் செஞ்சு வெக்கிறேன். அரை அவர் கழிச்சு வா". மனசைப் படித்து விட்டார் அங்கிருந்தே.

கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொணாடிருந்தேன்.மெல்ல சல்வாருக்கு மாறினேன். இதை வாங்கும் போது கூடவே மேட்ச்சாக ஒரு மாஸ்க் இலவச இணைப்பாக வந்தது. எப்போதாவது தேவைப் படலாம் என்ற பயத்தில் தனி பெட்டியில் பத்திரப் படுத்தியிருக்கிறேன்.

முகத்தை கழுவி தலையை வாரி ஒரு ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்த்தேன். லேசாக பேயறைஞ்ச லுக் தெரிந்தது. மின்தூக்கியில் கீழே இறங்கினேன்.

கடையில் எப்போதும் ஒரு மிதமான கூட்டம் வரவும் போகவும் இருந்து கொண்டே இருக்கும். நான் போனதும் வழக்கமான சிரிப்பு. என் கீரையும் வாழைப்பூவும் தனித் தனி  நெகிழி கவரில் கைக்கு வந்தன.

சின்ன ட்ரான்சிஸ்டர் போன்று தோன்றும் ஒரு கருவியில் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து ஜி பேயில் பணம் செலுத்தியதும் அது உரத்த குரலில் எவ்வளவு பணம் செலுத்தப் பட்டது என்று தமிழில் சொன்னது.

படிப்பறிவே இல்லாதவர்களும் தொழில்நுட்பத்தின் வாலைப் பிடித்துக் கொண்டால் எப்படியாவது  விரும்பிய இடத்துக்குப்  போய்ச் சேர்ந்து விடலாம் என உணர்ந்தே இருக்கிறார்கள்.

என் அருகில் நின்றிருந்த 12வயதுப் பெண்  ' பாட்டி திரிஞ்ச பால் வாங்கிண்டு வரச் சொன்னா" என்றது மழலை மாறாமல்.

விஜயாம்மா என்னைப் பார்க்க நான் அந்தப் பெண்ணைப் பார்க்க...ஒரே குழப்பம்.

"நா நல்ல பால் தாம்மா தர்றேன். திரிஞ்ச பால் என்னாண்ட இல்லியே.."

*இல்ல. பாட்டி இங்க இருக்கும்ணு சொன்னா" என்றது.

'க்ரீன் பால்' முணு பாக்கெட்'

'கடலை பர்பி'

'சாமந்தி பூ ரெண்டு முழம்'என்று வரிசையாக குரல்கள்.

அனைத்தையும் சமாளித்த பின் சிறுமியிடம் திரும்பினார்.

"பாட்டிக்கு போனை போடு"

மறுமுனையில் பாட்டி.

"இன்னாமா வேணும் உங்க பேத்திக்கு? திரிஞ்ச பால்னு கேக்குதே. அத்த வாங்கி இன்னா செய்வீங்க?"

"ஓ! தெரட்டுப் பாலா? பால் கோவான்னு சொல்லி அனுப்ப வேண்டியது தானே?"

சிரித்துக் கொண்டே ஒரு நூறு கிராம் ஆவின் பால்கோவாவை எடுத்து நீட்டினார்.

அடுத்து வந்த ஹிந்திக்கார இளைஞன் ''ஏக் லிட்டர் தூத் சாஹியே' என்றான். தந்தார்.

கீரை, வாழைப்பூவைக் கையில் வாங்கும் போது கடையில் யாருமில்லை. "ஹிந்தி கூட புரியுது. இந்த தெரட்டுப் பால் பாஷை தான் சட்டுனு புரியல"என்றார் சிரித்தபடி‌.

எப்படி  கோபமே படாமல் சிரித்த முகத்தோட எல்லாரையும் இவங்களால அணுக முடிகிறது? வீட்ல நாலு பேரை  சமாளிக்கறக்குள்ளே நமக்கு எத்தனை கோபம்?" நினைத்தேன். கேட்டே விட்டேன்.

"கடைக்குள்ளே வந்ததும் நமக்கு கஸ்டமர்தா பர்ஸ்ட்டு. மனசிலிருக்கறதெல்லாம் மூட்டையா கட்டி இந்த ஃப்ரீஸர்ல கடாசீருவேன். வீட்டுப் பிரச்னை அங்க இருக்கற ப்ரீஸர்ல இருக்கும். தேவைப் படும் போது எடுத்துக்கலாம்னு நெனப்பேன். ஆனா  அது அங்கேயே கெடந்து 
ஐஸா  மாறிடும். ஒண்ணு ரெண்டு தவிர மத்தது தேவையே படாது. அதை சுமந்துகிட்டு திரிஞ்சா என் வேகமே கொறஞ்சிருது " 

"சுடிதார கூட திருப்பி போட்டுட்டு வந்திருக்கே பாரு. டிசைன் மாறிருந்தா கூட நல்லாருக்கும். ஆனா நீ முன்பக்கத்த முதுகுப் பக்கம் போட்ருக்கே. கையில குக்கர் சூடா? வீட்டாண்ட போய் ஐஸ் ஒத்தடம் குடு. கொஞ்சம் தேங்கா எண்ணெய் தடவு. இருந்திடம் தெரியாம போயிரும். அப்படியே விட்டீனா  தழும்பாயிரும்" என்றார் என் கண்ணுக்குள் எதையோ தேடியபடி.

வீட்டை நோக்கி நடந்தேன் மனசின் ப்ரீசரைத் திறக்க வீட்டுக்கு வரும் வரை காத்திருக்கவில்லை. 

வாழ்க்கைப் பாடங்கள் எங்கிருந்தும் கிடைக்கும்!!

கல்வி கரையில.

2 comments:

  1. அருமைங்க்கா. மாடிலருந்து எறங்கி கீழ வந்துட்டுப் போற நிகழ்வ எவ்ளோ அழகா கதையாக்கிக் குடுத்திருக்கீங்க!!!!!

    //அரை அவர்// சென்னைக்கே உரித்தானது. தங்லீஷ்.

    நான் கூட ஒரு ஃப்ரீசர் வாங்கணுங்க்கா.

    ReplyDelete
  2. கதையை ஆரம்பித்தவுடன் கீழே வைக்கவே தோன்றவில்லை:ஒரே ஓட்டமாக ஓடி முடிந்து விட்டது.
    வாழ்க்கையை எப்படி நடத்தவேண்டும் என்னும் அரிய பாடத்தைப் புகட்டும் ஒரு நல்ல படைப்பு - லலிதா சூரியநாராயணன்.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...