Monday, January 1, 2024

உடையும் மௌனங்கள் - யசோதா பழனிச்சாமி, ஈரோடு.

 




கண்களை மூடிக் கொண்டிருந்த செண்பகத்திற்கு உறக்கம் வரவில்லை வெறுமனே தன் கண்களை இறுக்க மூடிக் கிடந்தாள். ஐம்பத்தைந்து வயதை எட்டிப் பிடிக்கும் நிலையில்  படுத்தவுடன் உறக்கம் வருவதென்பது காணாமல் போயிருந்தது. அவளுக்கு வாய்த்த தனிமை  மேலும், அவளுக்குள் மன இறுக்கத்தை  கொடுத்திருந்தது. கணவன் இறந்து சில வருடங்களாக இப்படியே தனியாளாகத் தான் இருக்கிறாள்..

'போன பிறவியில என்ன தான் பாவம் செஞ்சேனோ   தெரியல, என்னட வவுத்துல ஒரு புழு பூச்சி அண்டல. எம் புருஷனும் போய் சேர்ந்தாச்சு' என அவள் சொல்லும் போது வரும் பெருமூச்சு அவளின் மனத் துயரத்தையும், ஏக்கத்தையும் தாங்கி நிற்கும். அவளுடைய  கணவர் நல்ல  வேலையிலிருந்ததால், இன்றைக்கு வரைக்கும் கையில் காசுக்கு குறையில்லாமல், இருப்பதாக உறவினர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், செண்பகத்திற்கோ  காசு, பணம் இருந்து என்ன பிரயோசனம்? தனக்கென்று யாருமேயில்லையே என்ற வெறுமையில் இருந்தாள்.  அன்று ஏதோ ஒரு நினைவில் தன்னை மறந்த சூழலில் அவள் வீட்டின் காலிங் பெல் அடித்தது.

 வீட்டின் முன் கதவைத் திறந்ததும், ஆச்சரியத்தில் வாயடைத்து நின்ற செண்பகத் தை கட்டிக் கொண்டாள் அவள் தோழி வசந்தி.

செண்பகம் கண்களில் கண்ணீர் கடகடவென வழிந்தோடியது.

 "ஏய் இப்ப எதுக்கு அழற"

 "ஒண்ணுமில்லைடி..நீ மட்டுந்தான் என்னை அடிக்கடி வந்து  பார்க்க  கூடிய ஒரே ஜீவன். நீயும் வந்து கிட்டத்தட்ட ஆறு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு. அதுதான் எனக்கு உன்னப் பார்த்ததும் அழுகை பொத்துகிட்டு வந்திடுச்சு" என்றாள்.

 "மண்டு, மண்டு  எனக்கும் உன்னைப் பார்க்கணும் தீராத நினைப்பு தான்.  ஆனால், வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவில் எனக்கு வேலைப்பளு. மருமக வேலைக்குப் போறா. பேரனுக்கு ஒரு வயசு தான் ஆகுது. நான் தான் குழந்தையைப் பார்க்க வேண்டி இருக்கு. அந்தட்டம் இந்தட்டம் நகர முடியறதில்லை. இன்னிக்கு அவங்க எல்லாம் வெளியே கிளம்பிட்டாங்க. நீ போன் பேசும் போதெல்லாம்  உன் குரல் சரியாகவேயில்லை. அதுதான் உன்னை நேரில பார்க்கலானு கிளம்பி வந்துட்டேன். ஆமா, செண்பகம் உன்  கூடவே இருப்பானே  உன் தம்பி அவன் எங்கே?"

 "அவங்க அவங்க குடும்பம் குட்டினு வந்துடுச்சுனா அக்கா எல்லாம் கிள்ளுக் கீரையாக்கிடறாங்க. அவன் தான் இப்படினா, அவன் பெத்ததுக்காவது அத்தைனு ஒரு பாசம் இருக்குதா என்ன? யாரும் இப்ப எட்டிப் பார்ப்பதில்லை" என்று வெடுக்கென வெட்டிப் பேசினாள் செண்பகம்.

 "ஏய்,  நீ படிக்கிற காலத்தில் இருந்து இப்படியே தான்  எடுத்தெறிஞ்சு பேசிட்டே இருக்கே! இன்னும் மாறலையா?…இப்படி பேசினா யாரு வந்து உன்னைப் பார்ப்பாங்க சொல்லு. இந்த காலத்தில பல வீட்டுல பெத்ததுங்களே அப்பன், ஆயாவை பாக்கமாட்டேங்குது. நீ என்னடான்னா தம்பி பாக்கலைனு குறைபடற. அவங்கவங்களுக்கு  ஆயிரம் வேலை இருக்கும் எப்பவும்  உன்னையே  தாங்கிட்டு இருக்க முடியுமா?"

"என்ன நீயும் அவனுக்கு சப்போட்டா பேசிட்டே போற" என முகம் சிவந்தாள் செண்பகம்.

"செண்பகம் இந்த உலகத்தில எல்லாரும் எல்லா நேரமும் நம்மையே கவனிக்கணும் நினைக்கிறது நமக்கு நாமே வச்சுக்கிற சூன்யம். பெத்த புள்ளைகளே இன்னைக்கு கவனிக்காம விடற இந்த காலத்தில் உன்னட தம்பி எவ்வளவு கவனிச்சுக்கறான். நீ யோசிச்சு பாரு. நாம இருந்த காலம் வேற. இன்னைக்கும் நான் என்னட அம்மா, அப்பாவுக்கு பயந்துட்டு  இருக்கேன்னா, அதே மாதிரி எம் புள்ளைக  எனக்கு பயந்திட்டு   இருக்கணும்னு  நான் நினைச்சா, நான் தான் நிம்மதி இழந்து போவேன். யாருமே இல்லாம ஆசிரமத்தில  அனாதையா வளர குழந்தைங்க,  பெரியவங்க யாருகிட்ட எதை எதிர்பார்ப்பாங்க சொல்லு. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர உனக்கு உறவுனு சொல்ல ஆள் இருக்கேனு சந்தோஷப்படு.

அதுவும்,  கொரானா காலத்தில எத்தனை  புள்ளைங்க பெத்தவங்களை இழந்துட்டு அனாதையா நின்னாங்க! அவங்களுக்கு யாரு அடைக்கலம் கொடுத்திருப்பாங்க. அவங்க எங்கே? எப்படி? தங்களுக்குனு ஒரு எதிர்காலத்தை அமைச்சு இருப்பாங்க? பெத்தவங்க இல்லாம எதிர்காலமே கேள்விக்குறியா  நிக்கற அந்த குழந்தைகளோட மனநிலையிலா நீ இருக்க?  எப்படியும் இரண்டு மூணு வருஷம் போன அறுபதை தொடும் வயசாயிடுச்சு. உன் தேவைகளை பூர்த்தி செய்யற அளவு பணமும் இருக்கு. குடியிருக்க வீடும் இருக்கு. நீ நிம்மதியா இருக்கிறத விட்டுட்டு, எதுக்காக என்னைப் பாக்கல, பாக்கலனு அடிச்சுக்கற முதல்ல உன்னட மனநிலையை மாத்திக்க."

 "ஏய் வசந்தி  பேசி முடிச்சிட்டியா?" என்றாள் செண்பகம்.

 "இல்லடி  உன்னை நீ சரி செய்யற வரைக்கும், நான் உங்கிட்ட பேசணும்."

 "என்னை எப்பவும் சரி செய்ய முடியாது." என்றாள்.

 "என்னடி எப்பவும் இப்படியே விதாண்டாவாதமா தான் பேசுவியா?." என்றாள் வசந்தி.

"வசந்தி, எனக்குள்ள அழுத்திக் கொண்டிருக்கும்  கனத்தை இறக்கி வச்சாத்தான்  என் மனசுக்கு விமோசனம் கிடைக்கும். அதை இத்தனை நாளும் பொத்தி பொத்தி வச்சுட்டேன். இனியும் அப்படியே வச்சிருந்தா என்னட நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு".

 " என்னடி இப்படி பீதியைக் கிளப்பற" என்றாள் வசந்தி.

"எனக்கு குழந்தையில்லைங்கிற விஷயம் உனக்கு தெரியும். ஆனா என்னுடைய கணவருக்கு குழந்தை இருக்குங்கிற விஷயம் உனக்குத் தெரிஞ்சா எப்படி இருக்கும்?"

 "என்ன சொல்லற செண்பகம்!?" அதிர்ச்சியில் உறைந்தாள் வசந்தி.

"உனக்கே இப்படி இருந்தா எனக்கு எப்படி இருக்கும். அந்த அதிர்ச்சியான செய்தியிலிருந்து மீள முடியாம தான் தவித்துக் கொண்டிருக்கிறேன். இந்தா இந்தக் கடிதத்தைப் பாரு" என செண்பகம் கொடுத்தாள்.

கடிதத்தை கையில் வாங்கும் போது, வசந்திக்குள்   ஆச்சரியம் பொங்கியது. அதிலிருந்து வரும் செய்தி என்னவாகயிருக்கும் என்ற படபடப்புடன் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தாள்..  தட்டச்சு செய்யப்பட்ட சீரான வரிகள்..

செண்பகம் பெரியம்மாவிற்கு வணக்கம்!

உங்கள் வாழ்க்கையின் ஒரு நாளை பகிர்ந்து கொண்டு என்னைப் பெற்ற  அபாக்கியவதி மாதவி தான் என் அம்மா.  எனக்கும் கூட மேகலைனு பெயர் வைத்திருக்கா ஒரு வேளை உங்களை கண்ணகியாக நினைத்திருப்பாளோ தெரியல.

உங்களை நான்  பெரியம்மா என்று தான் கூப்பிட்டாக வேண்டும். எப்படி பெரியம்மா ஆனோம் என யோசிக்காம படிங்க.

அப்பா வேலை செய்யும்  அலுவலகத்தில் தான், அம்மாவை முதன் முதலில்  அப்பா சந்தித்து இருக்கிறார் . அம்மாவின் குடும்பத்தில் அவங்க அப்பா கூலித் தொழிலாளி. அம்மா சிட்டாள் வேலை பார்ப்பவர். என் அம்மாவுடன் பிறந்தவர்கள் மூன்று பெண்கள். யாருக்கும் திருமணமில்லை.

அம்மா தான் மூத்த பெண்.  பத்தாம் வகுப்பு படித்து இருக்கிறாள். அம்மா நன்றாக சமைப்பாள். அதனால், அவள் அம்மா, அப்பாவிடம் இறைஞ்சிக் கேட்டு பத்து பேருக்கு சமைத்து தர ஆரம்பித்தாள். வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் அளவு  இட வசதியில்லை. அதனால் சில அலுவலங்களில் பணி புரிவோருக்கு மதிய உணவை சமைத்துக் கொண்டு போய் கொடுத்திருக்கிறாள். 

அப்பா வேலை  செய்யும்  அலுவலகத்திற்கும்  மதிய உணவு  கொண்டு போவது அம்மாவின் வழக்கம். ஒரு நாள் அம்மா கொண்டு சென்ற உணவை சாப்பிட்ட ஒருவருக்கு ஏதோ காரணத்தால்  வாந்தி ஏற்பட்டு இருக்கிறது.  இதனால் அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அம்மாவை திட்டத் தொடங்கி இருக்கிறார்கள். அம்மா வசதியில்லாதவள் என்பதால் அவளுடைய பேச்சைக் கேட்க யாரும் தயாராக இல்லை. அம்மாவின் நிலை மிகவும் பரிதாபமாக மாறிவிடும் சூழலில், அம்மாவின் மீது எந்த விதமான தவறுமில்லை என்பதை விளக்கி, அவரின் மீது எந்த புகாரும் வெளியே போகாமல் இருக்க அப்பா உதவி செய்திருக்கிறார். அதனால் அம்மாவுக்கு அவரின் மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் அவர்களின் அன்பு அவர்களை அறியாமலே ஒன்றாக இணைய வைத்து விட்டது. அவர்கள் எதற்காக இணைத்து வைக்கப்பட்டார்கள் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சமென அம்மா அடிக்கடி என்னிடம் சொல்லுவாள்.  அப்பாவும், அம்மாவும் உடலால் இணைந்தது அந்த ஒரே ஒரு  நாள் மட்டுமே..  ஏற்கனவே ஒரு பெண் தன் கணவரை நம்பி இருக்கும் நிலையில், அந்த கணவரைப் பங்கு போட அம்மாவின் மனம் இடம் கொடுக்கவில்லையாம். அதனால் அம்மா, அப்பாவை விட்டு விலகியிருக்க ஆரம்பித்தாள்.

ஆனால் பாருங்க பெரியம்மா,  உங்களுக்கு  திருமணம் ஆகி இருபத்தைந்து வருடங்களாக குழந்தையில்லாத சூழலில், அம்மாவுடன் இணைந்த ஒரு நாளில் நான் வயிற்றில் கருவாக உருவாகி விட்டேன் என்பது  அப்பாவிற்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி. இதுக்காக நான் உங்களை தாழ்த்தி விட்டதாக நினைக்காதீங்க.

அம்மா, அப்பாவை விட்டு விலக நினைத்தும், அவர்களை விலகி விடாமல் விதி இறுக்கிப் பிணைத்தது.  தன் குழந்தைக்கு தந்தை வேண்டும் என்ற உணர்வில் அம்மா, அப்பாவை வீட்டிற்குள் அனுமதித்தாள்.

ஆனால், அவர்கள் தாமரை இலைத் தண்ணீர் போல் தான் வாழ்ந்தார்கள். நான் பிறந்த பிறகு, உங்களிடம் ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கலாமென  பல முறை  அப்பா சொல்லி இருக்கிறார். காரணம் என்னை தத்தெடுத்து, அங்கே கொண்டு வந்து அவரோடு வைத்துக் கொண்டு, என்னைக் கொஞ்சி தாலாட்டி அவர் கைப்பிடித்து நான் வளர வேண்டும் என்பதில் மிகுந்த ஆசை வைத்திருந்தார்.   ஆனால் நீங்கள் யாருக்கோ பிறந்த குழந்தையை வீட்டுக்கு எடுத்து வந்து வளர்ப்பதை விரும்பல. சொந்தத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு செய்தால் அவர்கள் நம்மை பார்த்துக்குவாங்க வெளியே இருந்து வரும் பிள்ளைங்க பார்க்காதுனு நீங்க  விடாப்பிடியாக  சொல்லியதைக்  கேட்டு அவர் மனம் உடைந்து போனார்.

தன்னால் தான் அம்மா வாழ்க்கை வீணாகிப் போனது என்ற மன உளைச்சலுக்கு அப்பா  ஆட்பட்டிருந்தார். அம்மா  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அப்பா மிகவும் பிரயத்தனப்பட்டார். ஆனால் அம்மா ஒத்துக் கொள்ளவில்லை.எனக்குனு இருக்கிறது இவ மட்டுமே. அவ எனக்கு துணையா என்னோடே இருக்கட்டும் எனக்கு திருமணமே வேண்டாம் என உறுதியாக சொல்லி விட்டாள்.

அப்பா இங்கே மாசம் ஒரு முறை மட்டுமே வந்து செல்லுவார். அவருக்கு உங்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் எதுவும் கிடையாது. அப்பா மூலமாக ஒரு குழந்தை இருப்பதைப் சொன்னால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் நாங்க அந்த ஊரை விட்டே வந்துட்டோம். அம்மா  கல்யாணமாகமலே பிள்ளை பெற்றதால் உறவுகளும் ஒதுக்கி விட்டார்கள்.

நானும் அம்மாவும் மட்டுமே இருந்தோம். அம்மா தனியார் கம்பெனி ஒன்றில், எடுபிடி வேலைக்கு போயி என்னை படிக்க வைத்தாள். அப்பாவிடமிருந்து காசு வாங்க அவள் என்றுமே விரும்பியதில்லை. அப்பா எவ்வளவு சொல்லியும் வாங்க மறுத்து விட்டாள்.

உங்கள் சம்பாதிப்பு முழுவதும் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே. நான் எங்கிருந்தோ வந்தேன் உங்களோடு சேர்ந்து ஒரு புள்ளையைப் பெத்து வளர்க்கணுங்கிற விதி இருந்திருக்கு அவ்வளவு தான், மற்றபடி பணமெல்லாம் வேண்டாமென அம்மா சொல்லிட்டாங்க.

அப்பா மிகவும் வருத்தப்பட்டார்.. அதனால், என்னுடைய பெயரில் வங்கியில் பணத்தை போட்டு வைத்திருந்திருக்கார். அப்பா  இறந்த பிறகு, எங்களிடம் அந்த பணத்தை கொண்டு சேர்க்கச் சொல்லி சொன்னதாக, வங்கி பாஸ் புத்தகத்தை ஒருவர் கொண்டு வந்து கொடுத்த போது தான், என் பெயரில் பணம் இருக்கும் செய்தி தெரிந்தது.

அந்தப் பணத்தை அம்மா இருக்கும் வரை தொடவேயில்லை. இப்ப என் அம்மா உயிரோடு இல்லை பெரியம்மா. கொரானாவால் இறந்துட்டாங்க. அவங்க இறக்கும் போது அவங்கள பக்கத்தில் இருந்து பார்க்கும் பாக்கியம் கூட எனக்கு கிடைக்கலை. அனாதை போலவே  தனிமையிலிருந்து அடக்கம் செய்யப்பட்டாங்க. எனக்கு  இப்போது இருபது வயசு.அப்பா எனக்கு  பணம் போட்டிருந்த வங்கிக்கு போய் உங்களுடைய அட்ரஸ்ஸை கேட்டு வாங்கிட்டு வந்தேன்.

பெரியம்மா, இப்ப நான் யாருமில்லாதவளாக இருக்கிறேன்.  எனக்கு உங்களை பெரியம்மானு கூப்பிடும் உரிமை இருக்கானு தெரியல. உங்களை தொந்தரவு செய்ய விருப்பமில்லை.. ஆனால் உங்களுக்கு அப்பாவின் வழியாக ஒரு பொண்ணு இருக்காங்கறத எனக்கு சொல்லணும்னு தோணுச்சு. எனக்கு உங்களைப் பார்க்கணும்னு தோணுது. பணத்துக்காகத் தான் நான் உங்களோடு இணக்கமாகிறேன்னு நினைச்சுடாதீங்க. உங்களுடைய அன்பு தான் எனக்கு வேண்டும்.  எப்போது என்னை பார்க்கணும் தோணுதோ,  அப்போது என்னை கூப்பிடுங்க. எங்கிருந்தாலும் ஓடி வருவேன்.

 உங்கள் அழைப்புக்காக உங்கள் மகள் காத்திருக்கிறேன்

 அன்புடன் மேகலை.

அலைபேசி எண் இருந்தது.

வசந்தி  கடிதத்தைப் படித்து முடித்தவுடன் என்ன சொல்வதென்றே தெரியாத திகைப்பிலிருந்தாள்.

"இப்ப சொல்லு வசந்தி, இந்த கடிதம் வந்து கிட்டத்தட்ட இரண்டு மாசம் ஆயிடுச்சு. என் தம்பிகிட்ட தான் முதலில் சொன்னேன். அதுக்கு அவன், "மாமா இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து நம்மகிட்ட சொல்லாமலே போயிருக்காரு, நீ ஏன் மறுபடியும் அந்த கடிதத்தை பத்தி நினைச்சுட்டு இருக்கே கிழிச்சு போட்டு வேலையைப்பாரு"னு சொன்னான்.  அவனுக்கு கவலை நாளைக்கு எனக்கு இருக்கும் பணம் காசு அந்த பொண்ணுக்கு போயிடுமோனு கூட இருக்கலாம்.

"அப்படி இருக்காது செண்பகம் அவன் உன் கணவர் மீதான கோபத்தில் கூட அப்படி சொல்லி இருக்கலாம். நீ எதையும் குதர்க்கமா பேசாதே! நீ இப்படி எடுத்தெறிஞ்சு யோசிக்காம பேசறதால் தான் உன் கணவர் உன்கிட்ட இருந்து அந்த பொண்ணு விஷயத்தை கூட மறைச்சு இருக்கலாம்..

அது தான் அந்த பொண்ணு சொல்லுதே அவள் அம்மா அதன் பிறகு அப்பாவுடன் இணையவேயில்லைனு. உன் வீட்டுக்காரர்  மூலமாக, ஒரு குழந்தை பிறந்து, அவர் தந்தையான பிறகும் உன்னை விட்டுப் போகல,  நீ வருத்தப்படற மாதிரியும் அவர் நடக்கல."

"இல்லை வசந்தி. இது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம். உனக்கு நினைவு இருக்கா, நாம கல்லூரியில் படிக்கும் போது கோவலன், கண்ணகியை விட்டு பிரிந்து, மாதவியின் அழகில் மயங்கி அவள் பின்னே சென்று விடுவான். அவன் திரும்பி வரும் போது, மீண்டும் அவனை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டிய கண்ணகி பாத்திரம் என்பதால் நான் நடிக்க மறுத்தேன். கண்ணகி போல ஓடிப் போயிட்டு வந்த புருஷனை என்னால் ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவ்வளவு பேர் மத்தியில் வாக்குவாதம் செய்தேன்.  'சரிடி விடு உனக்கு அப்படி ஒரு சூழல் வந்தால் டைவர்ஸ் பண்ணிடலா'னு நீ சொன்ன போது அங்கே எல்லோரும் சிரித்தார்கள். உனக்கு நினைவுயிருக்கா?

நான் எதை வேண்டாம் என சொன்னேனோ அதே வாழ்க்கைச் சுழியில் எனக்கே தெரியாமல் கட்டுண்டு கிடந்திருக்கேன். என் கணவர் இன்னொரு பெண்ணுடன் இணைந்திருக்கிறார் என்பதை என்னால்  ஏற்றுக் கொள்ள முடியல. என் கணவருக்கு குறை இருந்து, நான்  வேறொரு ஆணுடன் சந்தர்ப்ப வசத்தால் உறவாகி,  ஒரு குழந்தைக்கு தாயாகி இருந்தால் அவர்  என்னை ஏற்றுக் கொண்டு இருப்பாரா?"

 "அது முடிந்து போன சம்பவம் செண்பகம்.அது குறித்த ஆராய்ச்சி வேண்டாம். ஆனால், அந்தம்மா உன் வாழ்க்கையை பங்கு போட விரும்பாத, நல்லவளா இருந்திருக்கிறா. அதனால் தான்,  உன் புருஷனோட இறுதி காலம்  வரைக்கும் நீ அவரோடு இணைந்து வாழ்ந்திருக்கிறாய். ஆனால், ஒவ்வொரு நாளும்  உன்னோடு இருக்கும் போதெல்லாம் குற்ற உணர்வோடு தான் உன் கணவர் வாழ்ந்திருப்பார். அதுவே அவருக்கு கிடைச்ச மிகப் பெரிய தண்டனை.

நீ ஏன் மாதவியின் மகள் மேகலையை இங்கே வரவழைக்க கூடாது? எனக்குனு யாருமேயில்லைங்கிற உன் மனக்குறையை  மேகலை வாயிலாக இறைவன் தீர்த்து வைப்பதாக நம்பு  என  வசந்தி கூறியதைக்  கேட்ட செண்பகத்தின்  முகத்தில் ஒரு புன்னகை மிளிர ஆரம்பித்தது.


 - யசோதா பழனிச்சாமி, ஈரோடு.

 

 

 

 

 

 

1 comment:

  1. இந்தக் கத 'அப்பாவின் காதலிக்கு ஒரு கடிதம்'ங்கற ஒரு கதைய எனக்கு ஞாபகப்படுத்துச்சு.

    இது மாதிரியான கதைகள்ல இரண்டாவது துணையா வர்ற பெண்களோட கதாபாத்திர வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்குது.

    செண்பகத்தோட புன்னகை அவளோட மனக்குறையப் போக்கற மருந்தா இருக்கட்டும்.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...