கொரானாவினால் மூடப்பட்டிருந்த கடைகள், அப்பொழுது தான் அங்கங்கு திறக்க ஆரம்பித்துக் கொண்டு இருந்த்தார்கள். வழக்கமான காலை உணவு நேர பரபரப்பு நாங்கள் சென்ற போதும், சாப்பிட்டுவிட்டு கிளம்பும் போதும் இல்லை. ஒரு சோக நிகழ்வின் பின் துயில் எழுந்த முகம் போல கலை இழந்து இருந்தது அந்த மெஸ். மீண்டும் கொரானா வருமா? கடைகளை மூடி வைக்க சொல்லிவிடுவார்களோ ? இன்று ஆட்டிய மாவு தீர்ந்துவிடுமா என பல கேள்விகளின் ஊடாக நம்பிக்கையோடு கடையை திறந்து வைத்து வாடிக்கையாளர்களை வரவேற்றுக்கொண்டு இருந்தார்கள்.
பயணத்தை மீண்டும் துவங்கினோம். காலையில் புரோட்டா சாப்பிட்டதற்கு பயணம் மந்தமாகவே தான் இருந்தது. அதன் பின்னான கரையை ஒட்டிய வழி எங்கும் வயல்வெளிகள் சூழ்ந்து காணப்பட்டது. சற்று தொலைவு சென்றதுமே இன்டர்நேஷனல் ஸ்கூலின் பின்பகுதி தென்பட்டது. அதனை ஒட்டியே கல்லூரி. ஆர்டி பள்ளி யாருக்கு சொந்தமானது எப்பொழுது உருவாக்கினார்கள் என்ற கேள்வியின் ஊடாக பயணத்தை தொடர்ந்தோம்.
சற்று தொலைவு வந்ததும் குளு குளு என நிழல் தரும் அருமையான ஒரு கருப்பண்ணசாமி கோயில் இருந்தது. வண்டியை நிறுத்தினோம். இங்கு ஒரு சின்ன விவாதம். “பவானி பகுதியில் ஏன் கருப்பராயர் என்று சொல்றாங்க.. இங்கே எஙக பகுதியி. ஏன் கருப்பண்ணன் என்று சொல்றாங்க.. அங்கு எப்படி ராயர் ஆச்சு…”என்று விவாதம் எழுந்தது.
பவானி புதிய ஆற்றுப் பாலத்தை ஒட்டி, காளிங்கராயன் சந்திக்கும் இடத்தில் ஒரு மிக குட்டி கருப்பராயர் கோயில் இருக்கும். கரிய சிலை. சின்னஞ்சிறு சிலை. ஒரு அரிவாளோடு நின்று இருக்கும். அந்த சிலையைப் பார்த்த பொழுது எனக்கு எங்கள் பகுதியில் எல்லாம் கருப்பணசாமி என்று கூறுகின்றார்கள். இந்தப் பகுதியில் ஏன் கருப்பராயர் என்று கூறுகிறார்கள் என்று கேள்வி எப்பொழுதும் தூக்கியே நிற்கும்.
வந்து இளைப்பாற நின்ற கருப்பண்ணசாமி கோயில் ஒரு இயற்கை எழில் சூழ்ந்த கோயில். ஒரு ஐந்து ஆறு படிக்கட்டுகள் கீழே இறங்கி அடர்த்தியான மரங்களின் ஊடே ஏசியில் உள்ளதுபோல கருப்பண்ணசாமி அமர்ந்திருந்தார். வடக்கு பார்த்து ஏழு கன்னிமார்களும் வைத்திருந்தார்கள். எல்லாமே கொழுமாங்கல் அல்லது கருப்பண்ணசாமி கருங்கற்கள்தான். எதிரில் ரத்த காவு வாங்கும் காட்டேரி, அதன் கூடவே வேல், மணி கம்புகள் குத்தப்பட்டு இருந்த்து. அதனை கும்பிட்டு விட்டு சற்று நேரம் இளைப்பாறி விட்டு கிளம்பினோம்.
கொக்கராயன் பேட்டை பாலத்திற்குப் பிறகு காவிரியில் இருபுறமும் வயல்கள் சூழ்ந்த வெளியில் மிகவும் ரம்மியமாக இயற்கை எழிலோடு இருக்கும். அதன் பிறகு அந்தக் கழிவுகளை பாலித்தீன் கவர்கள் மதுபாட்டில்கள் அதிகம் இருப்பதில்லை. ஆனால் மதுபாட்டில்கள் அடித்து உடைத்து விட்டுச் சென்ற தடங்கள் இருக்கும். சற்று தள்ளி வந்ததும் ஓரிடத்தில் தார்சாலை குறுக்கிட்டது. நட்டாற்றீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழி என இடதுபுறம் ஒரு பலகை தென்பட்டது. வண்டியை திருப்பினோம். கூடவே என் நினைவுகளும்
சிறுவயதில் எங்களுக்கு மீன் வேண்டுமென்றாலும் காங்கேயன் பாளையம், சாவடிப்பாளையம் தான் வருவோம். தீர்த்தம் எடுக்கவும். இங்கு மட்டுமே உயிரோடு மீன்கள் கிடைக்கும். இங்கு இருந்து மொடக்குறிச்சி பள்ளிக்கு வந்த நண்பன், இப்போது எங்கே என்ன செய்து கொண்டு இருப்பான்? ஏன் இந்த தகவல் மிகுந்த காலகட்டத்திலும் அவர்களை தொடர்பு எல்லைக்கு வெளியிலேயெ வைத்து உள்ளோம்? பள்ளி வாட்ஸப் குழுவிலும் இல்லை என்பது இதனை எழுதும்போது தோன்றுகிறது.
வயல்வெளி மற்றும் காங்கேயன்பாளையம் ஊர் கடந்து காவிரி ஆற்றை அடைகிறோம். காவிரி ஆற்றின் நடுவில் தீவு போன்ற ஒரு அமைப்பு. அந்த தீவில் ஒரு பாறையின்மீது கோயிலில் உள்ளது. இரும்பினால் ஒரு கார் செல்லும் அளவிற்கு தற்பொழுது பாலம் அமைத்துள்ளார்கள். முன்பெல்லாம் பாலம் இருக்காது. தண்ணீர் குறைந்த பருவத்தில் மட்டுமே நடந்து செல்ல முடியும். மற்ற பருவத்தில் படகு சவாரி தான்.
வண்டியை நிறுத்திவிட்டு ஒரு சுற்று வந்தோம். தண்ணீர் உள்ளே புகாதவாறு கிட்டத்தட்ட ஒரு ஐந்து ஆறு அடிகள் தீவை சுற்றிலும் கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டு இருந்தது
அங்கங்கே கிடந்த கொழுமாங்கற்களை வைத்து கதிர் அண்ணன் வீடு கட்ட ஆரம்பித்தார். இந்த கூலாங்கற்கள் எவ்வளவு தூரம், எவ்வளவு காலம் உருண்டு பிரண்டு பயணம் செய்து இந்த இடத்தை அடைந்திருக்கும். அது எந்த மாதிரியான ஒரு வடிவத்திலிருந்து என்று இப்பொழுது இந்த மாதிரி வடிவத்திற்கு மாறி இருக்கும் என்று அதன் மீதான காதலை அவர் விவரித்துக் கொண்டிருந்தார். எனக்கு அவரின் அந்தக் காதல் ஆச்சர்யமாக இருந்தது.
கன்னிமார் கருப்பண்ணன்களை இது போல அளவு வாரியாக ஆற்றில் இருந்து தேர்ந்தெடுத்து வைத்து இருபார்களோ? அதன் தொடர்ச்சி தான் ஆற்றுக்கு வந்து தீர்த்தம் எடுக்கும் நிகழ்வோ? ஒரு ஆறு என்பது எப்படி நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
தொடரும்

கருப்பணசாமி பெயர் எதுவாக இருந்தாலும் கையில் அரிவாளோடு தான் எல்லா இடங்களிலும் காவல் காத்து வருகிறார்... தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteகட்டுரை மிகவும் விறுவிறுப்பாக போகிறது
ReplyDelete