Monday, April 1, 2024

பவானி2 நொய்யல் - காலிங்கராயன் தடம் 9 - க்ருஷ்

 


பெரும் பாறைகளின் மேலிருந்த கோவிலை அங்கங்கு காங்ரீட் பில்லர்கள் போட்டு வலிமை கூட்டி சற்று விரிவு படுத்தி இருந்தார்கள்.   கோயிலில் சற்று செயற்கை கூடி இருந்தது.  மக்கள் அங்கங்கு கொழுமாங்கற்களை அடுக்கி அடுக்கி வைத்து இருந்தார்கள்.  காவிரி நிரம்ப நீர். ஒரு பக்கத்தில் படிக்கட்டுகள் மூன்று நான்கு காவிரியில் இறங்கியது.  தேங்கி இருந்த தண்ணீர் தெளிவாக இருந்தது. அக்கரையில் மரங்களின் பசுமைச் சோலையின் ஊடாக ஒரு கட்டிடம் மிக அழகாக தெரிந்தது.   அந்த படிக்கட்டுகளில் இறங்கி கால் நனைத்தோம்.  


அங்கு ஒரு சிறுவன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தான்.  அவன் தூண்டிலில் பயன்படுத்தியது புழு அல்ல.  தூண்டிலை ஆற்றில் வீசிவிட்டு பையில் இருந்து ஏதோ ஒன்றை ஒரு கைப்பிடி  எடுத்து வீசினான்.   அந்த நேரத்தில் அதனைச் சாப்பிட வரும் மீன்களில் ஏதோ ஒன்று தூண்டிலில் மாட்டிக் கொள்கின்றது. 

”என்னடா தம்பி எடுத்து வீசறெ…”  

”சப்பாத்தி மாவுண்ணா”

சப்பாத்தி மாவு சின்ன சின்ன உருண்டைகளாக செய்து பையில் வைத்து இருந்தான்,  அப்படியே ஆற்றில் தூக்கி வீசினான்.   நாங்கள் இருந்த சிறிது நேரத்தில்  ஒவ்வொரு குத்து  சப்பாத்தி மாவை வீசும் பொழுதும் ஏதேனும் ஒரு மீன் மாட்டிக் கொண்டிருந்தது.  

 "பரவால்லடா.. சூப்பர்.." என்றதும் 

"குருட்டாம் போக்குல கிடைக்குதுண்ணா" என்றான்.  இவனின் யோசனை இப்படி. 

அந்த அழகை வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் அங்கு வந்தான் அவனுடைய ரெட் டீசர்ட் நண்பன்.  ஒரு பெரிய கல்லை எடுத்தான்.   இவன் "டேய்.. போட்றாதடா... மீனெல்லா எட்ட போயிரும் போடாதடா போடாதடா " என்று கத்தினான்.   அவன் கேட்கவில்லை.  அந்த கல்லை ஆற்றில் அடித்தான்.  அண்ணன் அவனிடம் “என்னடா தம்பி அடிச்சே ”

”மீனு” என்றான்.  இருவர்க்கும் சிரிப்பு தாளவில்லை.   இவனின் யோசனை இப்படி.  இந்தப் பயணத்தின் தொடக்கத்தில் பெட்டியை வைத்து மீன்  பிடித்தார்கள்.  ஒவொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஐடியாக்கள்.  


சமீபத்தில் தான் கிழவனும் கடலும் படித்திருந்ததால் அது பற்றிய உரையாடல் அந்த கண நேரத்தில் எங்களுக்குள் வந்து சென்றது. எந்த வயதிலும் மனிதர்களின் முயற்சி என்பது அயராத ஒன்று. 


அந்த இடம் விட்டு அகன்றோம்.  அங்கங்கு மரங்கள் அந்த இடத்தை குளு குளு என வைத்து இருந்தது.  அந்த தீவுக்கு எங்களை கூட்டி வந்த பாலம் நீல வண்ணத்தில் வானோடு சேர்ந்து மிளிர்ந்தது.  அங்கங்கு செல்பி  எடுத்துவிட்டு தீவின் கரையை ஒட்டி முக்கால் சுற்று வந்து படி ஏற முயன்றோம்.   ஒரு புறம்  கற்கள் அதிகமாக இருந்ததால் முழு சுற்று வர இயலவில்லை.  


படியில் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  வயதான பெரியவர். சுருக்கம் விழுந்த கண்கள். சட்டை இல்லை.  அவராகவே அறிவித்தார் “ சீக்கிரம் போங்க ஒரு மணிக்கு பூட்டிடுவாங்க”.   இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருந்தது.  

“எப்ப பாலம் கட்டினாங்க” என்றேன்.

 “இங்க தான் பரிசல் ஓட்டிக்கிட்டு இருந்தேன்..  ஒரு பத்துப் பாஞ்சு,  வருசமாயிருக்கும்ன்னு நெனைக்கிறேன்.  அதுக்கப்புறம்  ஓட்டறது இல்லை” என்றவர் ”சன் டிவியில் இருந்தெல்லாம் வந்து எங்கட்ட பேசிட்டு போனாங்க” சிரித்துகொண்டே கூறினார். 


அவருக்கு துடுப்பு போடுவதைத் தவிர வேறு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.   வேறு எதை எதையோ பேசிக்கொண்டே இருந்தார்.   காது சரியாக கேட்கவில்லை. படகோட்டிக் கொண்டிருந்த மனிதர் இன்று கோயிலுக்கு சேவகம் செய்து கொண்டிருந்தார்.  இவர்களுக்கு யாரிடமேனும் எதையேனும் கதைகளைக் கூறிக்கொண்டு இருந்தால் கூட போதுமானது.  வாழ்க்கை மிக எளிமையானது. அவரின் சக படகோட்டிகள்  என்னவாகி இருப்பார்கள் என்ற கேள்வி எனக்கு எழாமல் இல்லை.  காலம் யாருக்கும் நிலையான ஒன்றைத் தருவதே இல்லை.  ”Survival of the fittest” என்று மனிதர்களும் காலச் சூழலுக்கு மாறிக்கொண்டுதான் உள்ளார்கள். 


படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்றோம்.  உள்ளே சிவன் கோவிலுக்கு உண்டான அத்தனை அமைப்புகளும் இருந்தது.  ஒரு பெரிய கொலுமாங்கல் தான் சிவனாக இருந்தது. ‘இதுவும் கருப்பண்ணசாமி  தானோ?’    காலச் சூழலுக்கு கடவுளும் மாற்றம் அடைந்திருக்கலாம்.   ஒரு கல் நட்டு ஆரம்பித்து இருப்பார்கள் ஆதியில் அங்கு இருந்தவர்கள்.   படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றாக சேர்க்கப்பட்டு கோவில் கட்டப்பட்டு இருக்கும்.    தற்போது கிரானைட் போடப்பட்டு தூய்மையாக இருந்தது. அனைத்து இடங்களிலும் ஷெட் போடப்பட்டு மழை வந்தாலும் நனையாமல் இருக்கும் அளவு வைத்திருந்தார்கள்.   இது எல்லாமே சமீபத்தில் நிகழ்த்தவை.  நான் கடைசியாக 20 வருடங்களுக்குப் முன் பார்த்தற்கும், தற்போதைக்குமே எவ்வளவு வித்தியாசம். 



வெளியே ஒரு சுவரில் யாரோ ஒரு கவிஞர் அவருக்கு தெரிந்த வகையில் கவிதை என கேள்விகள் கேட்டு சிவனைப் போற்றி எழுதி வைத்து இருந்தார்.  கோவிலுக்கு பூசை செய்யும் அரச்சகர்கள்,  அன்று மாலை நடைபெற இருந்த லட்சார்ச்சனைக்கு பரபரப்பாக திட்டமிட்டுக்கொண்டு இருந்தார்கள்.  அவர்களிடம் சற்று பேச ஆரம்பித்தோம்.  


”உங்களுக்கு நினைவு தெரிஞ்சு தண்ணீர் மேலே வந்து இருக்காங்க?”   எனக்கு சிறு வயதில் செவி வழியாகக் கிடைத்த செய்தியை கேள்வியாக எழுப்பினேன்.  

ஒரு பழங்கதை இக்கோயில் பற்றி எங்கள் ஏரியாவில் உண்டு.  முன்னொரு காலத்தில் தண்ணீர் சிவன் இருக்கும் இடம்வரை சென்றது. பூசை செய்ய வந்த அர்ச்சகரினால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. சிவனை கட்டித்தழுவிக் கொண்டாராம்.  அதன்பிறகு ஆற்றுநீர் படிப்படியாக குறைந்தது என்பார்கள்.    ’இல்லங்க’ என்றார்.    லாஜிக்கலாக தற்போது வருவதற்கான வாய்ப்பு குறைவுதான்.  காவிரியில், பவானியில் எந்த அணையும் இல்லாத  கால கட்டத்தில், ஒருவேளை உண்மையாக நடந்திருக்கலாம். 


அதன் பிறகு எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.  “இங்க  புத்தக வெளியீடு  வைக்களாங்களா?”  என்றோம்.  அவர் சரி என்றோ,  வேண்டாம் என்றோ கூறவில்லை.  ஒரு சில ஏரியா பெருந்தலைகளைக் குறிப்பிட்டு ‘அவங்ககிட்ட பர்மிசன் கேளுங்க’ என்றார்.   உரையாடல்  தொடர்ந்தது.   இறுதியில் “எழுதறது ரொம்ப நல்ல விஷயம். அப்படியே ஆன்மீகம் பத்தியும் நிறைய எழுதுங்க..” என்றார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.  


இந்த இடம் காவிரி ஆற்றின் ஆரம்பம் தலைக்காவிரிக்கும், கடலில் கலக்கும் இடத்திற்கும் நட்ட நடுவில் உள்ள இடம் என்றார்.  உண்மையா என தெரியவில்லை.   ’அகஸ்த்தியரை’ வைத்து ஒரு ஸ்தல புராணம்  இருந்தது.  20 வருடம் முன் அந்த  ஸ்தல புராணம் இருந்த நினைவு எனக்கு இல்லை.  அந்தக் கதையைக் கூற ஆரம்பித்தார்.  ஒருவாறு சமாளித்து விடைபெற்றோம்.  


- தொடரும்

1 comment:

  1. மீன் பிடிக்கும் ஐடியாவை ரசித்தேன்..அந்தக் கோவில் பெயர் நட்டாத்தீஸ்வரா.. .. சுவாரஸ்யமான தொடர்...💐

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...