Friday, February 21, 2025

திரைகடலோடிகள் - அத்தியாயம் 1 - பிரதீபா


 


"இந்தியா ட்ரிப்" - வருடம் முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆகஸ்டு மாத வைபவம். தீபாவளி, பொங்கல், தேச ஒற்றுமை ஓங்க கும்பலாக ஆடும் தாண்டியா எல்லாவற்றையும்விட பெரிய கொண்டாட்டம் இதுதான் எங்களுக்கு. இந்த நாளுக்குத்தான் வருடம் முழுக்கவே கவுண்ட் டவுன் ஓடும். மூணு மாசம், மூணு வாரம், நாலு நாள் என்று குறைந்து கொண்டே வந்து, கிளம்பும் நாளன்று மனசு போடும் குதியாட்டம் இருக்கிறதே, மூன்று வயதுக் குழந்தை தோற்றுவிடும்.

இந்தியா சென்றுவரக் குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் தேவை. சில அலுவலகங்களில் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதி. பள்ளிகளில் அதுவும் கிடையாது. 3 நாட்களுக்கு மேல் சேர்ந்தாற்போல விடுப்பு எடுத்தால் அபராதம் 160 பவுண்டுகள் கட்ட வேண்டும். உடல்நலக்குறைவு, வெளிவேலைகள் என்று அனைத்தையும் தம் கட்டி சமாளித்து வருடம் முழுக்க ஆஃபீசுக்கு லீவே போடாமல் 21 நாட்கள் சேர்த்துவைப்பது என்பது தங்கநகை சிறுசேமிப்பை விட மிகக்கடினமானது. இதில் வெள்ளைக்கார நண்பர்களின் கிண்டல் வேறு. உங்களுக்கு மட்டுமென்ன மூன்று வாரம் ஹாலிடே என்பார்கள். "We are not going for Holiday, we are going Home" என்ற பதில் அவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, எங்களுக்குத் தற்காலிகப் பெருமையைத் தரும்.

ஃபிளைட் டிக்கெட் முன்பதிவு செய்வதில் வடிவேலுவை விடப் 'பிளானிங்கில்' சிறந்த லொஜக் மொஜக்குகள் என்னைப்போல நிறையப்பேர் உண்டு. புக்கிங் தொடங்கும்போதெல்லாம் விட்டுவிட்டுக் கடைசியில் புக் பண்ணுவோம். நான்கு பேருள்ள குடும்பத்துக்கு 3200 பவுண்டுகளுக்கு மேல் தண்டம் அழ வேண்டும் என்பது பெரிய விஷயம் தான். பத்து வருஷத்துக்கு முன்னாடி 3 டிக்கெட் ஆயிரம் ரூபா என்று கூவிக்கூவி விற்ற ஏஜென்சிகள் இந்த நேரத்தில் நினைவுக்கு வந்து வேறு தொலைக்கும். ஊருக்குப் போகிறோம் என்ற எண்ணம் ஒருபுறம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் , என்னவெல்லாம் செலவு செய்ய வேண்டிவருமோ என்ற லேசான கவலை மறுபுறம் ஒட்டிக்கொள்ளும். கிளம்புவதற்கான ஆயத்தங்கள் அவரவர் ஆர்வத்துக்கேற்ப சில நாட்கள் முன்பு, சில வாரங்கள் முன்பு என்று வேறுபடும். அக்கம்பக்கத்து பாட்டி தாத்தாக்களிடம், "வீட்டு மேல ஒரு கண்ணு வெச்சுக்கோங்க" என்பதில் இருந்து தொடங்கும் அனைத்துமே சுவாரஸ்யமான விஷயங்களாக இருக்கும்.
வருஷம் ஒருக்காதானே போறோம்கறதால எல்லாருக்கும் ஏதாச்சும் வாங்கணும். விதவிதமா கிப்ட் வாங்கினா எனக்கு கொறச்சல், உனக்கு ஜாஸ்தின்னு இருக்கிற மூணு வாரமும் பஞ்சாயத்துலயே போயிரும் என்ற பயத்தில் சாக்லேட் பாக்கெட்டுகளின் எடை மட்டும் எட்டு கிலோவாகியிருக்கும். 'முக்கியமானது ஏதும் இங்கேர்ந்து உங்க வீட்டுக்குக் குடுத்து விடணுமா?' என்று நட்புகளிடம் திடீர் தாராள பிரபுவாகி, அதையும் வெயிட்டு கம்மியா இருந்தா மட்டும் தாங்க என்று ஈயம் பூசியும் பூசாத மாதிரி கேட்கப்படும் கேள்விகள் அங்கும் இங்கும் உருண்டோடும்.

ஃபிரீசரில் மாவும், சாம்பாரும், தேங்காய்ச் சில்லுகளும், 4 பச்சை மிளகாயும் திரும்பி வந்தபின் இரண்டு நாட்களுக்காக சேமித்து வைக்கப்படும். "இந்தியா ஷாப்பிங்ன்னு ஒரு லிஸ்ட்டு கிச்சன் கதவுல ஒட்டியிருக்கும், சீக்கிரம் அதை எடுத்துட்டு வாடா தங்கம்" என்ற கொஞ்சல் தோய்ந்த ஏவல்கள் வீட்டுப் பொடுசுகளைக் கடுப்பாக்கும். ஏனென்றால் அங்கு பரிதாபமாய்த் தொங்கிக்கொண்டிருப்பது அடிஷனல் சீட் வாங்கி சாமான்கள் எழுதி எழுதி நீண்டுவிட்ட குறுநாவல்.

இங்க பிச்சைக்காரங்களாட்டமாத் திரிஞ்சாலும் ஊருக்குப் போயி அப்டியே இருக்க முடியாதுல்ல என்று தேர்ந்தெடுத்து நிராகரிக்கப்பட்டு, மீண்டும் தேர்ந்தெடுத்து என்று ஐந்தாவது மறுபரிசீலனையில் தேர்வாகும் நல்ல துணிமணிகளும்...

கதவு ஜன்னல் சாத்தி, கார் சாவியை ஒளித்து வைத்து, சுடுதண்ணி ஹீட்டர் எல்லாம் ஆஃப் செய்துவிட்டோமா என்று சரிபார்த்து...

"அய்யய்யோ! இந்த ட்ராவுல தானே வெச்சேன், இப்போக் காணோமே" என்று தாலியை ஒரு வழியாகத் தேடி எடுத்து அணிந்துகொள்ளும் தங்கமணியும் ...
வருடம் ஒருமுறையென்றாலும் ஐஸிஐசிஐ ATM கார்டைத் தூசி தட்டி பர்சில் எடுத்து வைக்கும் ரங்கமணியும்...

வீட்டிலிருந்தே தீனிப்பைகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு இந்தப் பரபரப்பு எதிலும் அலட்டாமல் நிற்கும் பிள்ளைகளுமாய்...

ஒருவழியாக டாக்சியில் பெட்டிகளை ஏற்றிவிட்டு அமரும்போது தான் அப்பா.....டி ஒருவழியாக் கிளம்பிட்டோம் என்றிருக்கும். லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் நாங்க இந்தியா போகப்போறோம் என்று மௌனமாகக் கூச்சலிடும் மனது, நமக்குமுன் ஏர்போர்ட் சென்று போர்டிங் பாஸ் வாங்கியிருக்கும்.


(தொடரும்)


1 comment:

  1. நல்ல நகைச்சுவை கலந்து செம்மையா இருக்குங்க.. வெயிட்டிங்

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...